அஜித் பிறந்த நாள்: இணையத்தில் குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகன் அஜித்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு, இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நடிகர் அஜித்துக்கு இன்று (மே 1) 48-வது பிறந்த நாள். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

சமூகவலைத்தளத்தில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று (ஏப்ரல் 30) மாலையே தொடங்கிவிட்டது. இந்திய அளவில் #HappyBirthdayThala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதில் அஜித் ரசிகர்கள் அவருடைய புகழ்பாடி ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

HBDIconicThalaAJITH, #HappyBirthdayAjith, #HBDAjithkumar, #HBDThala உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகள் அஜித் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், திரையுலக பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நாளில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக மவுனம் காத்து வருகிறது படக்குழு. தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் தொடங்கப்பட்ட போது, மே 1-ம் தேதி வெளியீடு என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தாமதம், ‘விஸ்வாசம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஆகியவற்றால் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *