அதர்வா – ஹன்சிகா படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

அதர்வா-ஹன்சிகா நடித்துள்ள ‘100’ படத்தின் ரிலீஸ், மே 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள சாம் ஆண்டன், மூன்றாவதாக இயக்கியுள்ள படம் ‘100’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி, ராகுல் தேவ், ரமேஷ் கண்ணா, மதுமிதா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் (2018) ஜூலை மாதம் நிறைவு பெற்றது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அவசர தொலைபேசிகளைக் (எண் 100) கேட்டு, அவர்களுக்கு உதவும் காவலர்களைப் பற்றிய படம் இது. எனவேதான் படத்துக்கு ‘100’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படம், வருகிற மே 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த வாரத்துக்கு மாற்றியுள்ளனர். மே 3-ம் தேதிக்குப் பதிலாக, மே 9-ம் தேதி (வியாழக்கிழமை) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

எனவே, இந்த வாரம் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘தேவராட்டம்’ (மே 1), அருள்நிதி நடித்துள்ள ‘கே 13’ (மே 3) ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன.

பட ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு முன்பு ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டிருப்பது, சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *