ஆந்திரா திரையரங்குகளில் நிறுத்தப்பட்ட ‘லட்சுமி என்.டி.ஆர்’: இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்

ஆந்திரா திரையரங்குகளிலிருந்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராம்கோபால் வர்மா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்தை இயக்கியுள்ளார். என்.டி.ராமாராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது.

கடும் போராட்டத்துக்குப் பிறகே இப்படம் வெளியானது. ஆனாலும், ஆந்திராவில் மட்டும் வெளியாகவில்லை. ஆந்திரா வெளியீட்டுக்கு கடுமையாக போராடி மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது படக்குழு. இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக வந்த ராம்கோபால் வர்மாவை போலீஸார் தடுத்து நிறுத்தி ஹைதராபாத்துக்கே திருப்பி அனுப்பினர்.

இவ்வாறு கடும் சர்ச்சைகளைத் தாண்டி இன்று (மே 1) ‘லட்சுமி என்.டி.ஆர்’ ஆந்திராவில் வெளியானது. ஆனால், அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதை நிறுத்தி விட்டார்கள் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “’லட்சுமி என்.டி.ஆர்’ திரைப்படம் ஆந்திராவில் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் கூறுகின்றனர். சென்சார் சான்றிதழ், உயர் நீதிமன்ற அனுமதி எல்லாம் கிடைத்த பின்னரும் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எவை?” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *