இயக்குநரின் குரல்: சீருடையில் மட்டும்தான் சமத்துவமா? – ஆர்.ஜே. ராம்நாராயணா

விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்கூல் கேம்பஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ஆர்.ஜே.ராம்நாராயணா. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஏ.எம்.என்.குளோபல் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். தினசரி அன்னதானம் உட்படப் பல்வேறு சமூகப்பணிகளைச் செய்துவரும் இவர், கல்வித்துறையில் இந்தியா காண வேண்டிய ஒருமித்த மாற்றம் என்ன என்பதைக் கதைக்கருவாகக் கொண்டு ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் வெளிவரும் முன்பே அதன் திரைக்கதையைத் துணிவுடன் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

பொதுவாகப் படத்தின் கதையை அது திரையரங்குகளில் வெளியாகும்வரை பொத்திப் பாதுகாப்பது வழக்கம். நீங்கள் முன்னதாக திரைக்கதையைப் புத்தகமாகவே வெளியிட்டுவிட்டீர்களே?

இந்தப் படத்தின் மூலம் நாங்கள் முன்வைக்கும் ஆணித்தரமான கருத்து, நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பதே நோக்கம். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை வெளியே தெரிய வேண்டும். அப்போதுதான், மாணவர், ஆசிரியர் சமூகம் இந்தப் படத்தைக் காண வருவார்கள். தமிழக அளவில் நூற்றுக்கணக்கான பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்களை அழைத்து ‘ப்ரிவியூ’ காட்சிகளைத் திரையிட்டேன்.

படம் பார்த்து முடித்ததும் “பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தெரியாமல் இருந்தது. அதை நீங்கள் கட்டிவிட்டீர்கள்” என்றார்கள். காமராஜர் பள்ளிச் சீருடையைக் கொண்டுவந்தார். பள்ளி என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் சமம் என்றார். அந்த சமத்துவம் சீருடையுடன் நின்றுவிடக் கூடாது; மதிப்பெண் பெறுவதிலும் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளிலிருந்து உருவானதுதான் இந்தப் படத்தின் கதை.

சமூக முன்னேற்றத்துக்குக் கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம், அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதும். அதைத்தான் எங்கள் படம் அதிரடியாகக் கூறவருகிறது. அதனால், படத்தின் கதையை எல்லா வகையிலும் பரப்புவதன்மூலம் இதை ஒரு விழிப்புணர்வு இயக்கமாக மாற்ற முடியும் என்று நினைக்கிறேன்.

திரைப்படம் இயக்க வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து கிடைத்தது?

1989-ல் ‘யுரேகா போர்ப்ஸ்’ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் விற்பனைப் பிரதிநிதியாக எனது பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்தத் துறை எனக்குத் தன்னம்பிக்கையை மட்டுமல்ல; வருமானத்தையும் கொட்டிக்கொடுத்தது. விற்பனையில் காட்டும் வேகத்தைப் பொருத்து இத்துறையில் மேலே மேலே போய்க்கொண்டிருக்கலாம்.

1990-ல், 22 வயது இளைஞனாக முதன் முதலில் எனது உழைப்பில் நான் விமானப் பயணம் மேற்கொண்டேன். இந்திய அளவில் விற்பனையில் நான்காவது இடத்தைப் பிடித்தேன். அதனால் நிறுவனம் என்னை காத்மாண்டுவுக்கு அழைத்துச் சென்றது.

அதன்பின் விற்பனை உத்திகளைப் பகிர்ந்துகொள்ள தேசம் முழுவதும் பயணித்தேன். ஒரு பெண் நம்மைக் காதலிக்க வேண்டும் என்றால்கூட நம்மைப் பற்றிய நல்ல விஷயங்கள் அவளைச் சென்றடையுமாறு செய்ய வேண்டும். விற்பனை என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் இந்த உலகமே இயங்காது. ‘சேல்ஸ் & மார்கெட்டிங்’ என்று வந்தபிறகு வேறு துறைகளைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடி வாழ்க்கைப் போய்க்கொண்டிருந்தது.

ஆனால், அத்துறையின் முக்கியப் பிரிவாக வளர்ந்துகொண்டு வந்த ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ என்னை வெகுவாகக் கவர்ந்தது. 2010-ல் அத்துறையில் கால் பதித்து, ‘ஏ.எம்.என் குளோபல் குரூப்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

கிரிக்கெட் ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்புக்காக கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து வழங்கியதுதான் எங்கள் முதல் நிகழ்ச்சி. அதன் பின்னர், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறநிறுவனங்கள் என நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்திக்கொடுக்காத துறைகளே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்தோம்.

முதல்முறை நான் இந்தியாவைச் சுற்றிவந்தபோது விற்பனை என்ற மந்திரச் சொல் மட்டுமே என் சிந்தையில் இருந்தது. ஆனால், நிகழ்ச்சி மேலாண்மை என்று வந்தபோது ஒட்டுமொத்த இந்திய சமூகம் குறித்த அக்கறை உருவானது.

குறிப்பாக, இந்தியக் கல்வித்துறை ஏன் இப்படி இருக்கிறது; விதவிதமான கல்வி முறைகள், விதவிதமான பள்ளிகள், ஆசிரிய சமூகத்திடம் அர்ப்பணிப்பு குறைவாக இருப்பது எனக் கல்வித்துறை சார்ந்த கேள்விகள் என்னைத் துளைத்தன. மக்களால் வளர்ந்த நான், இந்தச் சமூகத்துக்கு உருப்படியாக ஒன்றைத் திருப்பிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் கடந்த 2017-ல் ‘எஜுகேஷன் கான்கிளேவ்’ என்ற தலைப்பில் கல்வித்துறைக்கு அவசியமான சீர்த்திருந்தங்களை விவாதிக்கும் ஆறு கல்வியியல் மாநாடுகளை எனது சொந்தச் செலவில் நடத்தினேன். அதில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தொடர்ந்து கலந்துகொண்டார்கள்.

அதில் நாங்கள் கண்டறிந்த ஆக்கபூர்மான முறைகளைப் பள்ளிகளில் அமல்படுத்தும்படிக் கூறினோம். ஆனால், ‘எஜுகேஷன் கான்கிளேவ்’ வழியே கிடைத்த அரிய வழிமுறைகளை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டுமானால் அதற்குத் திரைப்படம்தான் சிறந்த ஊடகம் என்று முடிவு செய்து நானே எழுதி, இயக்கி இருக்கிறேன்.

உங்களது படக்குழு பற்றிக் கூறுங்கள்?

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ராஜேஷ்குமாரும் கலை இயக்கத்தை செந்திலும் செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷும் மதன் பாப்பும் பள்ளி முதல்வர்களாக நடித்திருக்கிறார்கள்.

நான் கதை நிகழும் பள்ளியின் தாளாளராக நடித்திருக்கிறேன். மாணவர்களாகப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்திருக்கிறேன். படத்துக்கு இசை தேவா. கதையோடு இணைந்துவரும் மூன்று சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடலை சுசீலா பாடினால் பொருத்தமாக இருக்கும் என அவரை அணுகியபோது ‘நான் பாடுவதை நிறுத்தி 15 வருடங்கள் ஆகிவிட்டது’ என்றார். படத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் என்றோம். படத்தைப் பார்த்துவிட்டு, “ இது படமல்ல; இந்தியக் கல்வித்துறையைப் புரட்டிப்போடப்போகும் பாடம்.

இந்தக் கதைக்காகவே நான் வந்து பாடுகிறேன்” என்று கூறி ஸ்டுடியோவுக்கே வந்து பாடிக்கொடுத்தார். இசை வெளியீடு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *