உதவியை மறவாத அஜித்: நெகிழ்ந்த ராஜீவ் மேனன் – ‘வாலி’ ப்ளாஷ்பேக்

உதவியை மறவாத அஜித்: நெகிழ்ந்த ராஜீவ் மேனன் – ‘வாலி’ ப்ளாஷ்பேக்

உதவியை மறவாத அஜித்தின் குணத்தைப் பார்த்து நெகிழ்ந்து போயியுள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித் கலந்து கொண்டு, முடியும் வரை அமர்ந்திருந்தார். அப்போது, நீண்ட நாட்கள் கழித்து ராஜீவ் மேனனை சந்தித்துள்ளார்.

‘என்ன chief’.. எப்படியிருக்கீங்க?’ என்று நீண்ட நாட்கள் கழித்த சந்திப்பால் தங்களுடைய நட்பை புதுப்பித்துள்ளனர். அப்போது, தன்னோடு வந்தவரிடம் அஜித், “Chief மட்டும் இல்லையென்றால்.. இன்றைக்கு இந்த நிலைமையில் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ராஜீவ் மேனன் “நான் என்ன பண்ணினேன். உங்களுடைய வளர்ச்சியில் எனது பங்கு என்ன” எனக் கேட்டுள்ளார். அதற்கு அஜித், “என்ன Chief… மறந்துட்டீங்களா… ‘வாலி’ பட வெளியீட்டுக்கு 2 லட்ச ரூபாய் தேவை. அப்போது என்னிடம் பணமில்லை. நீங்கள் தானே கொடுத்து உதவினீர்கள். அச்சமயத்தில் அந்தப் படம் வெளிவரவில்லை என்றால்.. இன்று நான் இல்லையே” என்று கூறியுள்ளார்.

இதை நம்மளே மறந்துவிட்டோம், இவர் இன்னும் ஞாபகம் வைத்துள்ளாரே என்று மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார் ராஜீவ் மேனன். ‘வாலி’ படம் தான் அஜித்தின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த முதல் படம். அதற்காக கொடுத்த பணத்தையும், அடுத்த ஒரு வாரத்தில் கொடுத்துவிட்டாராம் அஜித்.

Leave a Comment