என் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா

என் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயல்கிறேன் : நடிகை பாவனா

96’படத்தின் கன்னட ரீமேக்கில் த்ரிஷா அக்கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் பாவனா

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’96’. ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் கன்னட ரீமேக் தொடங்கப்பட்டது. ப்ரீதம் குப்பி இயக்க விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கோல்டன் ஸ்டார் கணேஷும், த்ரிஷா வேடத்தில் மலையாள நடிகை பாவனாவும் நடித்துள்ளனர். ’99’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

’96’ படத்தைப் பார்த்தவர்கள், ’99’ படத்தின் ட்ரெய்லரையும், பாடல்களையும் கடுமையாக சாடினார்கள். இது இணையத்தில் ஒரு விவாதமாகவே நடைபெற்றுள்ளது. இந்நிலையில், த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து முதல் முறையாக பதிலளித்துள்ளார் பாவனா.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “முதலில் நான் யோசித்தேன். பின்னர் இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்டிருக்கிறது என்று தன்னளவில் சமாதானம் அடைந்தேன்.

’99’ படத்திற்காக ஒப்பந்தமான பின்னரே ’96’ படத்தை ஒரு பார்வையாளராகப் பார்த்தேன். அதே வேளையில் நானே ஜானகியாக வாழ ஆரம்பித்த பின்னர் ஒரிஜினல் படத்தை மறந்துவிட்டேன். முழுக்க முழுக்க எனது பார்வையுடன் கதாபாத்திரத்தில் ஒன்றியுள்ளேன். நான் என் பாணியில் ஜானுவைக் கொடுக்க முயன்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் பாவனா.

Leave a Comment