கன்னடத்தில் ரீமேக் ஆகிறது ‘விஸ்வாசம்’?

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’, கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் விடுமுறையில் ரிலீஸான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், 100 நாட்களைக் கடந்து தமிழகத்தில் ஓடியது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லாத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படமாக ஆண்டின் தொடக்கத்திலேயே அமைந்தது.

எனவே, இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு, தெலுங்கில் மார்ச் 1-ம் தேதியும், கன்னடத்தில் மார்ச் 7-ம் தேதியும் வெளியானது. தெலுங்கில் ‘விஸ்வாசம்’ என்ற பெயரிலேயே வெளியாக, கன்னடத்தில் ‘ஜெகமல்லா’ என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தைக் கன்னடத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தப் படத்தை சிவா இயக்கப் போவதில்லை. சிவா தற்போது சூர்யா படத்துக்கான ஆரம்பகட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், வேறொரு இயக்குநர்தான் ரீமேக் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 1-ம் தேதி சன் டிவியில் ‘விஸ்வாசம்’ படம் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *