கீர்த்தியின் பிஸி ரகசியம்

கீர்த்தியின் பிஸி ரகசியம்

தெலுங்கில் 2 படம், இந்தியில் 1 படம் என கீர்த்தி சுரேஷ் பயங்கர பிஸி. இதில் தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் நடிக்கும் படம் விளையாட்டை மையப்படுத்திய கதை. இதற்காகப் பிரத்யேகப் பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டுவருகிறார். மேலும், மற்ற படங்கள்போல் அல்லாமல், உடல் ஃபிட்டாகத் தெரிய வேண்டும் என்று இயக்குநர் கூறவே, படப்பிடிப்பு முடிந்தவுடன் உடற்பயிற்சி என எப்போதும் கீர்த்தி பிஸிதான். தமிழில் அடுத்த ஆண்டுதான் கீர்த்தியைக் காண முடியும் என்கிறார்கள்.

மீண்டும் பறக்கிறார் சிம்பு

தம்பி குறளரசனின் திருமணத்துக்காக இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த சிம்பு, தற்போது மீண்டும் பாங்காக் செல்ல உள்ளார். அங்கே தற்காப்புக் கலைகளைக் கற்றுவிட்டு மே 20-ம் தேதிக்கு மேல்தான் சென்னை திரும்புகிறார். இம்மாத இறுதியில்தான் ‘மாநாடு’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் முடிவாகிவிட்டாலும், சிம்பு நடிக்கும் இதர கதாபாத்திரங்கள் தேர்வில் மும்முரமாகி இருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு

‘அசுரன்’ மீண்டும் தொடக்கம்

ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடிப்பது என்று ஆரம்பிக்கப்பட்டது ‘அசுரன்’. ஆனால், கோவில்பட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது மீண்டும் ஒரே கட்டமாக 40 நாட்களில் படமாக்கி முடித்துவிட வேண்டும் என ‘அசுரன்’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். அதேபோல், படத்தின் பாடல்களுக்கு இறுதிவடிவம் கொடுப்பதிலும் மும்முரமாகி விட்டார் ஜி.வி.பிரகாஷ்

த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு?

‘ராங்கி’ படப்பிடிப்புத் தளத்தில் த்ரிஷா மயங்கி விழுந்துவிட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனால், ஊடகர்கள் த்ரிஷாவின் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்தார்கள். இது தொடர்பாக த்ரிஷாவின் அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டால், “யாருங்க சொன்னது? த்ரிஷா இரவு பகலாக ‘ராங்கி’ படப்பிடிப்பில்தான் இருக்கிறார். யாரோ கிளப்பிவிட்ட வதந்தி” என்று பதிலளித்தார்.

நித்யா மேனன் ஹேப்பி

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகை டெய்சி விலகிவிட்டார். தற்போது அவருடைய கதாபாத்திரத்துக்கு நித்யா மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது முக்கியமான பழங்குடியினப் பெண் கதாபாத்திரம் என்பதால் ஒ.கே. சொல்லியுள்ளார் நித்யா மேனன். ராஜமவுலி இயக்கம் என்பது மட்டுமல்ல, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இப்படம் வெளியாகவுள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் நித்யா மேனன்.

விஜய் சேதுபதியின் மாணவி

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத்தலைவன்’ படத்தில் ஒளிப்படக் கலைஞராக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. ‘ஆசிரியரிடம் மாணவர் கற்றுக்கொள்வது மாதிரி விஜய் சேதுபதியிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது. தெலுங்கில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்துள்ளேன். அதே பெயர் தமிழிலும் விரைவில் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ராஷி கண்ணா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *