சாக்லெட் பாய் முதல் அல்டிமேட் ஸ்டார் : ஹேப்பி பர்த் டே தல!

சாக்லெட் பாய் முதல் அல்டிமேட் ஸ்டார் : ஹேப்பி பர்த் டே தல!

திரையுலகிலும் மக்கள் மனங்களிலும் இடம் பிடிப்பது என்பது சாதாரணமில்லை. அதிலும் உச்ச இடத்தைத் தொடுவது, அந்த இடத்தைத் தக்கவைப்பது என்பது எளிதானதல்ல. அப்படியொரு இடத்தில்தான் தனித்துவத்துடன் அமர்ந்து, இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் அந்தஸ்தில் வெற்றிக்கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் தல அஜித்.

இந்த இடத்துக்கு வருவதற்கு, இவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்ததற்கு, இந்த வெற்றிக்கனிகளைப் பறிப்பதற்கு,உறுதுணையாகவும் பக்கத்துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தது ஒன்றே ஒன்று. அது… நம்பிக்கை. தன்னம்பிக்கை.

யாரோ யாரையோ கைதூக்கிவிடுகிற உலகத்தில், தன் கையே தனக்கு உதவி, தன் திறமையே தன்னை கைதூக்கிவிடும் என நம்பி, வாய்ப்புத் தேடுதலில் இறங்கினார்.

பல பிரயத்தனங்கள். தெலுங்குப் படம் கிடைத்தது. படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, இயக்குநர் இறந்துவிட்டார். படம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு வேறொரு இயக்குநர். அதன் பின்னர், தயாரிப்பாளர் மறைவு. மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு, தயாரிப்பாளரின் மகன் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார். படம் வந்தது. ஆனால் ஓடவில்லை. ஒருவழியாக, திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் அஜித்.

அதன் பிறகுதான் தமிழில் அறிமுகமானார் ‘அமராவதி’யில். படம் வந்த கையுடன் பழைய விபத்தின் ஆபரேஷன். படுத்தபடுக்கையாக இருந்தார், ஆஸ்பத்திரியில். இயக்குநர் சுபாஷ் வந்து, காத்திருந்து, இவரை வைத்துப் படமெடுத்தார். அதுதான் ‘பவித்ரா’. இதன் பிறகு, மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில் ‘ஆசை’ வந்தது. எல்லோருக்குமான ஆசைநாயகனானார் அஜித்.

அகத்தியனின் ’வான்மதி’ ஹிட்டடித்தது. அடுத்து வந்த ‘காதல்கோட்டை’ அதிரிபுதிரி வெற்றி. ’அநேகமாக, தமிழ் சினிமாவில் அதிக தோல்விப்படங்களைக் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன்’’ என்று அஜித்தே சொல்லியிருக்கிறார். வரிசையாக தோல்விப்படங்கள். ஆனாலும் சினிமாபாஷையில் சொன்னால், ‘லைம்லைட்’டிலேயே இருந்தார் என்பதுதான் ஆச்சரியம்.

சரண், கவிகாளிதாஸ், முரளி அப்பாஸ், ஜே.டி.ஜெர்ரி, எஸ்.ஜே.சூர்யா, துரை, ஷரவணன் சுப்பையா, ஏ.ஆர்.முருகதாஸ் என இவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ‘ரெட்டைஜடை வயசு’ படத்தை அடுத்து ‘உன்னைக்கொடு என்னைத் தருவேன்’ என கவிகாளிதாஸுடனும் ‘காதல்மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என சரணுடனும் இணைந்தார் அஜித்.

தெலுங்குப் படம் ‘காதல் புத்தகம்’ என தமிழில் டப் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தை அழைத்துதான், காதல் மன்னன், அமர்க்களம் தயாரிக்கச் செய்தார் அஜித். சாக்லெட் பாய் இமேஜில் தொடங்கிய அஜித்தின் கேரியர், மெல்ல மெல்ல, ஆக்ஷனுக்குள் அவதாரமெடுத்தது. அமிதாப் தயாரித்த ‘உல்லாசம்’, சரணின் ‘அமர்க்களம்’ முருகதாஸின் முதல் படமான ‘தீனா’ இவையெல்லாம் அஜித்தை மாஸ் ஹீரோ எனும் கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டே வந்தன.

ஆனாலும் கூட, ‘முகவரி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மாதிரியான மென்மையான கதாபாத்திரங்களிலும் ‘சிட்டிசன்’, ‘ரெட்’ மாதிரியான ஆக்ஷன் படங்களிலும் வெரைட்டி காட்டினார். இந்த வெரைட்டிக்கெல்லாம் முத்தாய்ப்பாகவும் தைரியம் கொடுத்ததும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வாலி’. அப்படியொரு நெகட்டீவ் ரோலில் அப்பவே செய்யும் தைரியம் இருந்தது. அது ‘மங்காத்தா’விலும் தொடர்ந்தது.

ஹீரோ என்றாலும் நடிகன் என்றாலும் ஒரு இமேஜ் மெயிண்டெய்ன் செய்வார்கள். ஆனால், நரைத்த இயல்பான முடியுடன் மங்காத்தாவில் மாஸ் காட்டினார். இது அவரின் 50வது படம்.

இந்த ஐம்பது படத்துக்குள், பரமபதம் போல் ஏறி இறங்கி, இறங்கி ஏறி என்றுதான் இருந்தது அஜித்தின் கிராஃப். இத்தனை தோல்விகளுக்கு நடுவிலும் தன் அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றார். ரசிகர்கள் தேவை. ஆனால் மன்றம் வேண்டாமே என்று கலைத்தார். முன்னதாக, பெண் சாயல் கொண்ட ‘வரலாறு’ படத்தில் கேரக்டர் பண்ணினார். பரதம் ஆடினார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ‘பில்லா’ ரீமேக். அப்பேர்ப்பட்ட ஸ்டைல் மன்னன் ரஜினி நடித்த படத்தை ரீமேக்கி என்ன செய்யப் போகிறார் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த போது, அப்படியொரு ஸ்டைலீஷ் அஜித்தாக கெத்துக் காட்டினார்.

சிவா வந்தார். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ இப்போது வந்த ‘விஸ்வாசம்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டினார். ‘விவேகம்’ தோற்றதும் ‘சிவாவுக்கு இனிமே சான்ஸ் கொடுக்காதே தல’ என்பதே வைரலாகின. ஆனால் அடுத்தும் வாய்ப்பு கொடுத்தார். ஹிட்டடித்தார். அதுதான் அஜித்தின் ஸ்டைல். அதுதான் அஜித்தின் தன்னம்பிக்கை.

‘’அஜித்தோட ‘வில்லன்’, ‘வரலாறு’ ரெண்டு படம் ஒர்க் பண்ணிருக்கேன். அதுல டபுள் ஆக்ட். இதுல டிரிபிள் ஆக்ட். ஒரு டைரக்டர் என்ன நினைக்கிறாரோ, அதைக் கொடுக்கணுங்கறதுல ஆர்வமா இருப்பார். லைட்பாயைக் கூட சார் போட்டுக் கூப்பிடுவார். ஒருத்தர்கிட்ட, நாலுநாள் பழகினார்னா, அஞ்சாம் நாள், அவரோட முகவாட்டத்தை வைச்சே என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிச்சிருவார். அப்படியொரு மனித நேயமிக்கவர். ரஜினி சாரோடயும் கமல் சாரோடயும் ஒர்க் பண்ணும்போது, எப்படி இருந்துச்சோ, அப்படித்தான் அஜித்தோட சேரும்போது உணர்ந்தேன்’’ என்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

விழாக்கள், போராட்டங்கள், பேட்டிகள், டிவி நிகழ்ச்சிகள் என வரமாட்டார். ஆனால் ஏதேனும் துக்க நிகழ்வு, மரணம் என்றால் வந்துநிற்பார். இன்றைக்கு அமர்க்களமாய் போய்க்கொண்டிருக்கிற அஜித்தின் வாழ்க்கைக்கு பக்கத்துணை, பக்காத்துணை எல்லாமே அவரின் நேர்மறை சிந்தனைகளும் மனைவி ஷாலினியும்தான்!

இன்றைய தேதி வரை, அஜித்தின் படங்களுக்கு இருப்பது போல்,பிக் ஓபனிங் வேறு எவருக்கும் இல்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும்.

அஜித் அப்படித்தான். அஜித் சுயம்பு. எவராலும் முன்னுக்கு வரவில்லை. எவரும் கைதூக்கிவிடவில்லை. தானாகவே தன்னை முட்டிமோதிக்கொண்டு, பூமியில் இருந்து வந்த சுயம்புவாக ஒளிர்ந்து நிற்கிறார் அஜித்.

அஜித்திடம் எந்தத் திட்டமிடலும் இல்லை. அதாவது எந்தப் பிளானும் இல்லை. தன்னம்பிக்கையும் திறமையும் உண்மையான உழைப்பும் இருந்தால், ஜெயிப்பது நிச்சயம். இதுதான் அஜித் வாழ்ந்துகாட்டித் தந்திருக்கிற உதாரணம்.

சுயம்பு அஜித்தின் பிறந்தநாள் (1.5.19) இன்று. ஹேப்பி பர்த் டே தல!

Leave a Comment