சிம்புவின் திருமணம்தான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது: டி.ராஜேந்தர் பேட்டி

சிம்புவின் திருமணம் குறித்த கேள்விதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும், விதியின் மீதும்தான் எனத் தெரிவித்துள்ளார் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்.

டி.ராஜேந்தரின் இளைய மகனும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கும் நபீலாவுக்கும், கடந்த 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற்றது. இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இந்த காதல் திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

நேற்று (மே 29), சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று (மே 30) பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “என்னுடைய இளைய மகன் திருமணத்தைப் பொறுத்தவரையில், நான் சினிமாவில் மட்டும் காதலை ஆதரிப்பவன் கிடையாது. ‘மதங்களைப் பார்க்க மாட்டேன்’ என்று சினிமாவில் மட்டும் சொல்றவன் டி.ராஜேந்தர் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, என் மகன் மனதுக்குப் பிடித்திருக்கிறதா… கல்யாணம் செய்துகொள். உனக்கு ஓகே என்றால், எனக்கும் சம்மதம். ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடியவன் நான்.

எல்லாப் பெற்றோர்களுமே, அவர்கள் குழந்தைகளின் நலனுக்காகத்தான் வாழ்கின்றனர். அவர்களைப் படிக்க வைப்பதாகட்டும், உருவாக்குவதாகட்டும்… நான் என் பிள்ளைகளை நடிக்க வச்சேன், மியூஸிக் அடிக்க வச்சேன்… ஆனால், ஓரளவுக்குத்தான் படிக்க வச்சேன்.

ஆனால், மற்ற தாய் – தந்தைகள், தங்கள் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர், ஆளாக்குகின்றனர். ஆனால், கல்யாணம் என்று வரும்போது, அப்பா – அம்மா விருப்பப்படிதான் பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இது என்னுடைய கருத்து. பிள்ளைகள் ஆசைப்பட்டால் துணி வாங்கித் தருகிறோம், பொம்மை வாங்கித் தருகிறோம், பைக் வாங்கித் தருகிறோம். அதேபோல், கல்யாணத்திலும் பிள்ளைகளின் உணர்வை மதிக்கக்கூடிய தாய் – தந்தையாக எல்லோரும் இருக்க வேண்டும். ஆனால், அப்படி எல்லோருமே இருக்க முடியாது. ஒவ்வொரு தாய் – தந்தைக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனாலும், நல்ல தாய் – தந்தையாக இருப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.

அப்போது ஒரு பத்திரிகையாளர், ‘சிம்புவுக்கு எப்போது திருமணம்?’ என்று கேள்வி எழுப்பினார்.

“இறைவன் அருளால் சீக்கிரம் நடக்கும். வெளிப்படையாகச் சொன்னால், இதுதான் எனக்கு மனத்தாங்கலாக இருக்கிறது. உங்கள் மேல் மனத்தாங்கல் இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும் அளவுக்கு இறைவன் என்னை வச்சிருக்கானே, விதி என்னை வச்சிருக்கே… என்னுடைய வருத்தம், ஆதங்கம் எல்லாமே இறைவன் மீதும், விதியின் மீதும்தான். கேள்வி கேட்பது உங்களுடைய கடமை. பதில் சொல்வது என்னுடைய கடமை. ஆனால், பதில் சொல்ல முடியாமல் போவது என்பது என்னுடைய சூழ்நிலை” என்று பதில் அளித்தார் டி.ராஜேந்தர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *