ஜீரோ’ பட தோல்வியால் விரக்தி: அடுத்த படத்தை முடிவு செய்யாமல் ஷாருக் கான் தவிப்பு

ஜீரோ’ பட தோல்வியால் விரக்தி: அடுத்த படத்தை முடிவு செய்யாமல் ஷாருக் கான் தவிப்பு

ஷாருக் கான் நடிப்பில் வெளியான ’ஜீரோ’ படம், பெரும் தோல்வி அடைந்தது. எனவே, அடுத்த படம் குறித்து முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார் ஷாருக் கான்.

அத்துடன் சீன இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஷாருக் கான், ‘ஜீரோ’ தோல்வி, அது ஏற்படுத்திய தாக்கம், தற்போதைய மனநிலை என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

“இப்போதைக்கு எந்தப் படத்திலும் நடிக்க விரும்பவில்லை. நான் படம் பார்க்கப் போகிறேன். அத்துடன், நிறைய கதைகளைக் கேட்டு வருகிறேன். புத்தகங்கள் படிக்கிறேன். எனது பிள்ளைகள் அவர்களது கல்லூரிப் படிப்பை முடிக்கின்றனர். சுஹானா இன்னும் கல்லூரியில் இருக்கிறார். ஆர்யன் இந்த ஆண்டு கல்லூரியை முடிக்கிறார். எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்.

ஜூன் மாதத்தில் அடுத்த படம் குறித்து முடிவு செய்வதாகச் சொல்லியிருந்தேன். ஆனால், ஜூனில் அதை செய்யப் போவதில்லை. இதயபூர்வமாக எப்போது படம் செய்ய விரும்புகிறேனோ, அப்போதே அடுத்த படம். இதுவரை 15, 20 கதைகள் கேட்டுவிட்டேன். 2, 3 கதைகள் அவற்றில் பிடித்திருந்தன. ஆனால், அதையும் இறுதி செய்யவில்லை. ஏனெனில், நான் முடிவு செய்துவிட்டால் முழு ஈடுபாட்டுன் ஷூட்டிங்கில் இறங்கிவிடுவேன்.

பீஜிங் சர்வதேச திரைவிழாவில் ’ஜீரோ’ திரையிடப்படுவதில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. படத்தை திரையிடாவிட்டாலும்கூட நான் வருவேன் என்று படக்குழுவினரிடம் சொல்லியிருந்தேன். நாங்கள் அந்தப் படத்தை அவ்வளவு காதலுடன் உருவாக்கினோம். ஆனால், ரசிகர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை இல்லை என்றால், அதுதான் இறுதிநிலை. அதை மாற்ற இயலாது” என ஷாருக் கான் பேசியிருக்கிறார்.

Leave a Comment