டிஜிட்டல் மேடை 25: திருவான்மியூர் தாதாவின் கதை!

‘ஜீ5’ ஒரிஜினல் வரிசையில் கடந்த வாரம் வெளியான ‘ஆட்டோ சங்கர்’, தமிழில் இணையத் தொடருக்கான தளத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. 1980-களில்

இளம்பெண்கள் நேரத்துக்கு வீடு திரும்பவும், குழந்தைகளுக்குச் சோறூட்டவும் அச்சுறுத்தலுக்காக அம்மாக் கள் அதிகம் உச்சரித்த பெயர் ‘ஆட்டோ சங்கர்’. பத்திரிகைகளில் புலனாய்வுக் கட்டுரைகளாகவும் தொடர்களாகவும் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளுமாகவும் ஆட்டோ சங்கர் கதை வெளியாகி இருக்கிறது. இதில் பேசப்படாத பக்கங்களைப் பதிவுசெய்யும் நோக்கில், இணையத்தின் துணையுடன் தொடராகி இருக்கிறது ‘ஆட்டோ சங்கர்’.

சங்கரின் பாணி

சேலம் மத்திய சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்படுவதற் கான ஏற்பாடுகளுடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. தூக்குக்கான விசை இழுபடும்போது கதை பின்னோக்கி சென்னைக்குத் தாவுகிறது. சாதாரண ஆட்டோ ஓட்டுநரான கௌரி சங்கர், பெரிய ஆளாகும் ஆசையில் கள்ளச்சாராயக் கடத்தலில் தனது கற்ற வாழ்க்கை யைத் தொடங்குகிறான்.

பின்னர் அதனுடன் தொடர்புடைய அடிதடி, பாலியல் தொழில், போதைப்பொருள் கடத்தல் என சகல நிழலுலக நடவடிக்கை களிலும் படிப்படியாக இறங்குகிறான். தனக்கு எதிரான காவல்துறை, அதிகார வர்க்கத் தினரைச் சரிக்கட்ட பணத்தையும் பெண்களையும் பயன்படுத்துகிறான். அதிலும் பெண்களை அனுப்பி காரியங்கள் சாதிப்பது சங்கரின் தனி பாணி.

விஸ்வரூப வில்லன்

இதற்கிடையே திருமணமாகி மனைவி குழந்தையுடன் வாழும் சங்கர், வெளியே ஒரு நடன மாதுவிடம் கிறங்குவதும் அவளுக்காக எதையும் செய்யத் துணிவதும் அவனுக்கு விரோதிகளையும் துரோகிகளையும் அதிகரிக்கச் செய்கிறது.

விளை வாக சங்கரின் குற்றப் பட்டியலில் கொலைகளும் சேர்கின்றன. தனது வீட்டின் சுவரிலும் தரையிலும் சடலங்களைப் புதைத்து, நாட்டையே உலுக்கிய கொலைத் தாண்டவங்களைத் தொடர்கிறான்.

காரியம் சாதிக்கப் பெண்களை அனுப்பியதில், உள்ளடியாக அனைத்துச் சந்திப்புகளையும் ரகசிய கேமராக்களில் ஆவணமாக்குவதும் அவற்றை அவ்வப்போது துருப்புச் சீட்டாக்கி மேலும் காரியம் சாதிப்பதும் அதிகார வர்க்கத்தைச் சீண்டுகிறது.

விளைவாக சங்கரின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்குகிறது. ‘வெளியே தேர்வெழுதச் செய்துவிட்டு சிறைச் சுவர்களுக்குள் பாடம் நடத்துகிறது இந்த வாழ்க்கை’ என்ற புலம்பலுடன் சிறைக்கு செல்லும் சங்கரைத் தூக்குமேடை வரவேற்கிறது.

இணையத் தொடர்

பாப்லோ எஸ்கோபர் பாதிப்பில் ‘நார்கோஸ்’ உள்ளிட்ட சர்வதேச இணையத் தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. இங்கும் இந்தியில் ‘சாக்ரெட் கேம்ஸ்’ தமிழில் ‘வெள்ள ராஜா’ உட்படப் பல்வேறு தொடர்கள் உண்டு. அவற்றுக்குச் சற்றும் குறையாத சுவாரசியமாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக 10 அத்தியாங்களில் இந்த இணையத் தொடர் பதிவு செய்ய முயல்கிறது.

சங்கரின் விழிகளுடன் வரும் சரத் அப்பானியின் நடிப்பும், அவருக்குக் குரல் தானம் தந்தவருமாகச் சாதித்திருக்கிறார்கள். தனி தோரணையாக மடித்துக் கட்டிய லுங்கியுடன் எதிராளிகளுடன் மோதுவது முதல் சிறையில் அடைபட்ட பின்னரும் பெண்களை வளைப்பதுவரை ஆட்டோ சங்கரைக் கண் முன்பாக உலவவிடுகிறார்கள்.

‘காவல் தெய்வம்’ குறும்படத்தில் ஈர்த்த சரண்யா, இதில் சங்கரின் மனைவியாகக் கவனிக்க வைக்கிறார். இயக்குநர் ரங்காவின் ‘கல்ட்’ கதையாடலுக்கு அரோலின் பின்னணி இசை துணை செய்திருக்கிறது.

பெற்றோரால் தறிகெட்டுப்போகும் சங்கரின் இளம்பருவம், அப்பாவி கௌரிசங்கர் தன் குழந்தையின் பசிக்காக அதிரடி ஆட்டோ சங்கராகும் நள்ளிரவு அடிதடி சம்பவம் போன்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் தொடருக்குத் தூணாகின்றன. முதல், கடைசி 3 அத்தியாயங்களில் தெறிக்கும் விறுவிறுப்பு மற்ற இடங்களில் தொய்வு காட்டுகிறது.

தொடரின் நிறைவாக தூக்கிலிடப்பட்ட சங்கரின் கால்கள் துடித்து அடங்குவது நீளமான காட்சியாக வருகிறது. அதிகார வர்க்கம் தனது சுயநலத்துக்காக ஓர் அடியாளை மாஃபியா தலைவனாக வளர்த்து விடுவதும் சமயம் வந்தால் அவனையே பலியாடாக்குவதுமாய், அந்தக் கால்களின் உதறல் தொடர் முடிந்த பின்னரும் நம்மைப் பின்தொடர்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *