தண்டல்காரன்! – பாடலாசிரியர் கபிலன்

‘போக்கிரி’ படத்துக்காக ‘தீப்பந்தம் எடுத்துத் தீண்டாமை கொளுத்து…’ என விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஆதரவாகப் பொங்கிய பாடலாசிரியர் கபிலன், இன்று ‘என்ஜிகே’ படத்தில் ‘ஊரும் சேரியும் ஒண்ணா இல்லையே நம்ம நாட்டுல! காதல் செய்தால் ஆளை வெட்டுறான் நடு ரோட்டுல..!’ என்று ஆணவக்கொலைக்கு எதிரான வரிகளை கொடுத்திருக்கிறார்.

‘உன் சமையல் அறையில்..’ தொடங்கி ‘என்னோடு நீயிருந்தால்..’ என்பன போன்ற பல காதல் பாடல்களால் தனது இருப்பிடத்தைப் பதிவுசெய்துவரும் சூழலில், அதற்குச் சமமாகச் சமூகச் சிந்தனையுள்ள கருத்துகளையும் அழுத்தமாகக் கூறிவருகிறார், பாடலாசிரியர் கபிலன்.

அடுத்தடுத்து ‘காப்பான்’, ‘சைக்கோ’, ‘ஜெயில்’, ‘பொன் மாணிக்கவேல்’ உள்ளிட்ட படங்கள் வழியே முன்னணி இயக்குநர்களுக்குப் பாடல் எழுதிவரும் இவர், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி, தயாரித்து வரும் ‘99 சாங்க்ஸ்’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதி முடித்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரிடம் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறீர்கள். உங்களை அந்த அளவுக்கு ஈர்க்க என்ன காரணம்?

இருவருமே புதுமை விரும்பிகள். இசையிலும், குரல் தேடல்களிலும் புதுமையைப் புகுத்துகிறார்கள். அதை ஈடுசெய்யவே புதிதாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதன் வழியே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ தொடங்கி ‘99 சாங்க்ஸ்’வரையிலும், ஹாரிஸுக்கு ‘கண்ணும் கண்ணும் நோக்கியா..’ பாடல் முதல் ‘காப்பான்’ வரை நான் பயனுள்ளவனாக இருந்து வருகிறேன்.

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை யொட்டி கவிஞர்கள் பலரும் கூடி அவரைச் சிறப்பித்தீர்கள். சமகாலப் பாடலாசிரியர் குறித்து அவருடைய பார்வை என்ன?

இசை ஞானியுடன் அமர்ந்து ஒரு பாடல் உருவாக்குவது கூட்டு முயற்சியாகத்தான் இருக்கும். ஒரு பாடலில் தேவையில்லாத இடத்தில் அரசியல், சமூகச் சீர்கேடு, வலிந்துரைத்தல், அறச்சொல் கூடாது. அதேபோல், பாடலுக்காக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார். அவரோடு சேர்ந்து பாடல் எழுதுவது தலைப்பிரசவமாகவும் சுகப்பிரசவமாகவும் இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடல்களின் வெற்றி ஆயுள் மிகவும் குறைவாக இருக்கிறதே?

வாரத்துக்கு மூன்று படங்கள் வெளியாகின்றன. ஒரு படம் வெளி யாகி அப்படத்தின் பாடல் ரேடியோ, தொலைக்காட்சி வழியே மக்களிடம் போய்ச் சேர்வதற்குள் அடுத்த வாரத்துக் கான 3 படங்கள் வெளியாகின்றன. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய முக்கியமான சில பாடல்கள்கூட மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேரவில்லை.

அதற்குக் காரணம் நானோ, இசையமைப்பாளரோ அல்ல. படங்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான். இப்போது சில மாதங்களாக வாராவாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இனி பாடலின் ஆயுள் அதிகமாகும் என்று நம்புகிறேன்.

என்ஜிகே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல் காரன்’ பாடல் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தண்டல்காரன் என்ற வார்த்தைக்கு இங்கே நிறைய ஆதாரங்கள் கொடுக்க முடியும். குறிப்பாக கம்பு வைத்துக்கொண்டு பணம் வசூலிப்பவருக்குத் தண்டல்காரன் என்று பெயர். அதேபோல, ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?’ என்ற முதுமொழியும் இங்கே இருக்கிறது. திருக்குறளிலும், புறநானூறிலும்கூடத் தண்டல் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வரியை வசூலிப்பவரும் தண்டல்காரன் என்ற ஒரு கருத்தை தேவநேயப் பாவலர் கூறியிருக்கிறார்.

இப்படித் தண்டல் என்றால் கொடுத்தல், வாங்குதல், வசூலித்தல் எனப் பல அர்த்தம் உண்டு. மக்கள் வரிப்பணித்தில் வாழ்கிற அதிகார அரசியல்வாதிகள் பற்றிச் சொல்ல வேண்டியதால் ‘என்ஜிகே’ படத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தமிழைக் கற்றுத் தமிழால் வாழ்ந்துகொண்டிருப்பதால் நானும் ஒரு தமிழ் தண்டல்காரன்.

பட்டிமன்ற விவாதங்களில் பாடல்கள் என்றால் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன் என்றே குறிப்பிடுகின்றனர். சமகாலப் பாடலாசிரியர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளவே வேண்டியிருப்பது ஏன்?

அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன், திருக்குறள் முனுசாமி, குன்றக்குடி அடிகளார் மாதிரியான தமிழறிஞர்கள் பட்டிமன்றம் நடத்தியபோது இருந்த ஆரோக்கியம் இன்று இல்லை. சமகாலப் பாடலாசிரியர்களின் பங்களிப்பை இன்றைய சில பட்டிமன்றப் பேச்சாளர்கள் சரியாகக் கேட்காததுதான் அதற்குக் காரணம்.

மனைவி, மாணவர்கள், குழந்தைகளைக் கிண்டல் செய்வது என நகைச்சுவைக்காக மட்டுமே பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு தலைப்பை முறையே ஆய்வு செய்து சரியான குறிப்புகளோடு வந்து பேசுவதில்லை. நான் எழுதினேன் என்பதற்காகச் சொல்லவில்லை. இருந்தாலும் குறிப்பிட விரும்புகிறேன்.

‘உணவு உடை இருப்பிடம் உழவனுக்குக் கிடைக்கணும்; அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கே படைக்கணும்!’ என ‘வேட்டைக்காரன்’ படப் பாடலிலும், ‘சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள!’ என்று ‘போக்கிரி’ படத்திலும், ‘போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டம் கூட்டி ஓட்டுப் போட்டோம்.

ஏமாற்றமே எங்கள் பண்பாடுதான்!’ என்று ‘எங்க ஊரு மெட்ராஸூ’ பாடலும், ‘பள்ளிக்கூட புள்ளப் போல சாதி பார்க்காம சேர்ந்திருப்போம்!’, ‘ஹிந்தி திணிப்பு வேணாம்டி, கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டி!’ என ‘வில்லு’ படத்தின் பாடல்களிலும், ‘காலா’ படத்துக்காக ‘கற்றவை பற்றவை’ என்றும் இப்படி தொடர்ந்து இன்றைக்கு ‘தண்டல்காரன்’ பாடல் வரைக்கும் சமூக விஷயங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன்.

ஏதோ ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு, பார்வையாளர்களை எப்படியாவது சிரிக்கவைப்பது எனப் பேச்சாளர்கள் தேவையில்லாமல் சமகாலப் பாடலாசிரியர்களின் கோபத்துக்கு ஆளாவது நல்லதல்ல!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *