தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் ரத்து: தனி அலுவலர் உத்தரவு

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் ரத்து: தனி அலுவலர் உத்தரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை ரத்து செய்ய தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் செயல்பட்டு வருகிறார். விஷால் தலைமையிலான நிர்வாகிகள் ஒழுங்காகச் செயல்படவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்றும் எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும், வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் எடுத்து செலவழித்துவிட்டதாக எதிரணி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பணம் கையாடல் புகார் ஒன்றையும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தனர். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான கே.ராஜன், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் கையெழுத்திட்டு புகாராக அளித்தனர். இது தொடர்பான கணக்கு வழக்குகளை பொதுக்குழுவில் தான் சமர்ப்பிப்போம் என்று விஷால் அணி தெரிவித்தது.

கடந்த மார்ச் 3-ம் தேதி, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவின் ஆலோசனைப்படி, மறுதேதி குறிப்பிடாமல் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகு, மே 1-ம் தேதி எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு குளறுபடிகள், சர்ச்சைகள் என தயாரிப்பாளர்கள் சங்கம் சிக்கலுக்கு ஆளானதால், தமிழக அரசே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதன்படி, சேகர் என்ற தனி அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்காக நியமித்துள்ளது தமிழக அரசு. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இவரின் மேற்பார்வையில்தான் நடைபெறும்.

இந்நிலையில், நாளை (மே 1) நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் தனி அதிகாரி சேகர். இதுகுறித்த அறிவிப்பு, தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Comment