திரைவிழா முத்துக்கள்: வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஓடம்!

திரைவிழா முத்துக்கள்: வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஓடம்!

அன்றாடத்தின் அழகியலைக் கவித்துவமான காட்சி மொழியில் சித்தரிக்கும் இந்தியத் திரைப்படங்களில் வங்க மொழிப் படங்களுக்குத் தனி இடம் உண்டு. சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சலி’யில் தொடங்கி அபர்னா செனின் ‘தி ஜாப்பனீஸ் வைஃப்’வரை இந்திய சினிமாவை மெருகேற்றிய வங்க மொழிப் படங்கள் பல.

இந்தியாவைத் தாண்டியும் வங்க மொழிப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. வங்கதேசத்தின் படங்கள்தாம் அவை. அப்படியான ஒரு படமான ‘தி ஆரஞ்ச் ஷிப்’ (வங்க மொழியில் ‘கோமோலா ராக்கெட்’) சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

பொழுது சாயும் வேளையில் பல பயணிகளைச் சுமந்தபடி நதியில் புறப்படுகிறது பழுப்பு நிற நீண்ட நீராவிக் கப்பல் ஒன்று. அதில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு என ஒதுக்கப்பட்ட அடுக்குகளில் அந்தந்தத் தரப்பினர் ஏறிக்கொள்கிறார்கள்.

சதியும் விதியும்

முதலாம் வகுப்புப் பயணி தாஹிர் அகமத் எந்நேரமும் பதற்றத்துடனே இருக்கிறார். மூன்றாம் வகுப்புப் பயணி மோன்சூர் சோகமே உருவாக ஒரு சவப்பெட்டியை இழுத்துக்கொண்டு வருகிறார். ‘ஜோதிடம் பார்க்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு கப்பலின் எல்லா அடுக்குப் பயணிகளிடமும் வலிந்து பேசியபடி திரிகிறார் விலைமாதர் தரகர் முஷாரஃப் கரிம்.

வசதிபடைத்த இளம் பெண் ஒருத்தி தன் காதலனை அதே கப்பலில் ரகசியமாகச் சந்தித்து அவனுடன் நேரம் செலவிடுகிறாள். அவளுடைய அக்காவுக்கும் அக்கா கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை சச்சரவும் திருமண வாழ்க்கை குறித்த விரக்தியும் வெளிப்படுகிறது.

காப்பீட்டுப் பணத்தை ஈட்டத் தன்னுடைய தொழிற்சாலையைத் தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டுச் சிக்கலில் இருந்து தப்பிக்கவே இந்தக் கப்பலில் தாஹிர் அகமத் பயணம் செய்வது பின்பு தெரியவருகிறது. அதே தீ விபத்தில் தன்னுடைய மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அவருடைய பிணத்தைத்தான் மோன்சூர் எடுத்துக்கொண்டு பயணப்படுவதும் திரைக்கதையின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்படுகிறது.
குமட்டும் உண்மை

திட்டமிட்ட நேரத்துக்குள் கப்பலைச் செலுத்த முடியாமல் போகக் கப்பலுக்குள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன் பிறகு மேட்டுக்குடிக்கான அடுக்கில் உள்ளவர்களும் கையில் தட்டை ஏந்திக்கொண்டு மிச்சம் மீந்த சாப்பாட்டுக்காகக் கப்பலின் அடித்தட்டுக்கு வந்து வரிசையில் நிற்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த இக்கட்டான தருணத்தில்தான் தரகர் முஷரஃப் கரிம் மூலமாகத் தொழிலதிபர் தாஹிர் அகமதும் தொழிலாளி மோன்சூரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள்.

தனக்கே போதவில்லை என்றாலும் தன்னுடைய சாப்பாட்டில் இருந்து ஒரு துண்டு பச்சை மிளகாயைக் கிள்ளி தாஹிருக்குத் தருகிறார் மோன்சூர். அதே நொடியில், தன்னுடைய சுயநலத்துக்காகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி பெண்ணின் கணவர்தாம் இவர் என்பதும் அந்தப் பெண்ணின் பிணமும் அங்கு அருகில் கிடத்தப்பட்டிருக்கும் பெட்டியில் இருப்பதும் தெரியவரக் குடலைப் புரட்டிக்கொண்டு வாந்தி எடுக்கிறார் தாஹிர்.

இப்படி ஓர் இரவு முழுக்க நீளும் கப்பல் பயணத்தின் ஊடாக வெவ்வேறு மாந்தர்கள் தங்களுடைய எதிர்காலம் பற்றிக் கொண்டிருக்கும் கனவு, அவரவர் ஆழ்மனத்தை உலுக்கும் துக்கம், தூங்கவிடாமல் துரத்தும் குற்ற உணர்ச்சி, காதலின் ஊடாக வெளிப்படும் காமம், வறுமையின் வாட்டம், மேட்டுக்குடியினரின் தந்திரம் எனத் திரையில் நுட்பமாக வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடத்தைச் சொல்கிறது ‘தி ஆரஞ்ச் ஷிப்’.

வங்கதேசப் பிரபல எழுத்தாளரான ஷாஹாதஸ் ஜமனின் ‘மவுலிக்’, ‘சைப்ரஸ்’ ஆகிய இரண்டு சிறுகதைகளைத் தழுவி இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நூர் இம்ரான் மித்து. வர்க்க பேதம் நம் சமூகத்தில் எத்தனை ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதன் திரை சாட்சி ‘தி ஆரஞ்ச் ஷிப்’.

Leave a Comment