நெசவுக்குப் பின்னால் இத்தனை வலிகளா? -’தறி’ சீரியல் நாயகி ஸ்ரீ நிதி உருக்கம்!

கலர்ஸ் டிவியின் புதிய வரவான ‘தறி’-‘இந்த நவீன காலத்திலும் நெசவுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் அன்னலட்சுமியின் கதை’. இந்த சீரியலுக்காக இப்படி முன்னறிவிப்புக் கொடுத்த நாளிலிருந்தே சீரியலுக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது.

நெசவாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கஷ்டம் நிறைந்த மறுபக்கத்தையும் பதிவு செய்கிறது ‘தறி’. இது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலை காஞ்சியின் நெசவு வீதிகளில் காட்சிப்பிடிப்பு செய்து வருகிறது சீரியல் குழு. கடந்த வாரத்தில் ஈஞ்சம்பாக்கத்திலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. சீரியலின் நாயகி ஸ்ரீ நிதி சிவப்பு தாவணியில் கண்களை உருட்டி உருட்டி டைரக்டரின் ஆக்‌ஷனுக்கு அவதாரம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

டீ பிரேக்கிற்காகக் காத்திருந்தேன். அந்த பிரேக்கில் ஸ்ரீநிதியிடம் அட்டென்டெண்ஸ் போட்டேன். “ஒரி டென் மினிட்ஸ்… ஞான் வரும்” என்று சொல்லிவிட்டு செட்டுக்குள் ஓடினார். பத்து நிமிடம் என்பது ஒருமணி நேரமானது. ‘‘ஸாரி” என்றபடியே மீண்டும் என் முன்னே வந்த ஸ்ரீநிதியிடம், “கேரளத்திலிருந்து அடுத்த வரவா?” என்று ஆரம்பித்தேன். சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.

கேரளத்திலிருந்து தமிழுக்கு இன்னொரு புது வரவா?

உண்மைதான்… தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமில்ல, சீரியல் இண்டஸ்ட்ரியும் எங்களுக்கு ஏகமா வாய்ப்புக் கொடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட ஃபர்ஸ்ட் சீரியல் என்ட்ரியே இதுதான். ‘தறி’ மாதிரியான ஒரு நல்ல கதையில் நான் லீட் ரோல் பண்ணுவேன்னு நினைக்கல. இப்பதான் ப்ளஸ் டு முடிச்சிருக்கேன். மலையாளத்தில ஒரு படம் நடிச்சிருக்கேன். அந்தப் படம் போஸ்ட் புரொடக்‌ஷன்ல இருக்கு.

அதுக்குள்ள தமிழ்ல இப்படியொரு வாய்ப்பு கிடைச்சது கிஃப்ட்தான். இந்தத் தொடரோட ஒன்லைன் கதை சொன்னப்பவே ரொம்பப் பிடிச்சிருந்தது. காஞ்சிபுரம் பட்டு பத்தி மட்டும்தான் தெரியும். பட்டு ஸாரி எப்படிச் செய்வாங்கன்னு சுத்தமா தெரியாது. ஆனா, இதில நடிக்கிறதுக்காக காஞ்சிபுரம் போய் நெசவாளர்கள மீட் பண்ண பின்னாடிதான், நம்ம ஆசைப்பட்டு கட்டுற பட்டுப்புடவைக்கு பின்னால, இவ்ளோ ஹார்டு வொர்க் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

நீங்க தறி நெய்யக் கத்துக்கிட்டீங்களா?

ஆமா, நானும் கத்துக்கிட்டேன். கதையின் நாயகி அன்னலட்சுமி நான். எங்க குடும்பம் நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்து. நீங்க தறியில புடவை நெய்யற மாதிரி நடிக்கிற சீன்ஸ் வரும்னு டைரக்டர் சொல்லியிருந்தாங்க. அதனால, கேமரா முன்னாடி சும்மா கால் கையை ஆட்டுற மாதிரி இருக்கக்கூடாதுன்னு நானும் தறி நெய்யக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல கத்துக்கும்போது ரொம்ப வலி இருந்துச்சு. இப்போ பழகிருச்சு. அப்பதான் நானும் புரிஞ்சுக்கிட்டேன் எவ்ளோ கஷ்டப்பட்டு தறியில வேலை செய்றாங்கன்னு. அது மட்டுமில்லை, காஞ்சிபுரம் மக்கள் ரொம்பவே அன்பானவங்க. எளிமையா பழகுறாங்கப்பா.

தமிழ் சீரியல்ல நடிக்கிறது பிடிச்சிருக்கா?

ரொம்பவே பிடிச்சிருக்கு. அதிலயும் சூப்பரான டீமோட வொர்க் பண்றேன். ஸ்டார்ட்டிங்ல ரொம்பவே டேக் வாங்கினேன். இப்போ, கொஞ்சம் பரவாயில்லை. மிஸ்டேக்ஸை சரி பண்ணிக்கிறேன். நல்லா நடிக்கணும். நடிப்புல நல்ல பேர் வாங்கணும்னு ஆசையிருக்கு. இந்த சீரியலுக்காக ஃபேமிலியோட இப்போ சென்னைக்கு வந்து செட்டில் ஆகியாச்சு.

அன்னலட்சுமி ரோல் எப்பிடி?

கிட்டத்தட்ட என்னோட நிஜ கேரக்டர்தான் அன்னலட்சுமி ரோல். ரொம்பக் குழந்தைத்தனமா, சின்னப் பசங்களோட விளையாடிட்டு இருக்கிற கேரக்டர்தான் நானும். அதனால, அந்த கேரக்டரோட நான் சீக்கிரமே மிங்கிளாகிட்டேன். வீட்லகூட என்னோட அம்மா அன்னம்னுதான் கூப்பிடுறாங்க. சீக்கிரமே ஒரிஜினல் பேர மறந்துட்டு நானே அன்னலட்சுமின்னு ஃபிக்ஸ் ஆகிடுவேன்னு நினைக்கிறேன்- என்று கன்னம் சிவக்க சிரித்தவர், “ஏய்… காஞ்சிபுரம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்கப்பா, அங்க இன்னும் சூப்பரா இருக்கும்” என்று சொன்னார்.

“நிச்சயம் வருகிறேன்” என்று அவருக்கு பை சொன்னேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *