வெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50

வெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50

தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய சுவையான தகவல்களைக் கேட்பதும் படிப்பதும் எப்போதுமே தமிழ் ரசிகர்களுக்கு அலுப்பதேயில்லை. திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத் துறையுடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கூட சினிமா பற்றிய பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணம்.

அப்படிப்பட்ட ஒருவர் தனது அனுபவக் கதைகளையும் தான் பார்த்த சினிமாக்களின் கதைகளையும் அது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்துகொண்டால், அது நிச்சயம் சுகமான வாசிப்பு அனுபவத்தையே தரும். அப்படி ஒரு நூல்தான் பயாஸ்கோப்.

இதை எழுதியிருக்கும் கிருஷ்ணன் வெங்கடாசலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி இவர் என்னும் தகவல் அவரை வாசகருக்கு நெருக்கமாக உணரவைக்கும்.

திரைப்படங்கள்மீது தனக்கிருந்த பேரார்வம் காரணமாகவே இந்த நூலை எழுதியிருக்கிறார் இவர். 1940-ம் ஆண்டு வெளியான சகுந்தலை படம் முதல் 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணாம்மா வரை இவருக்குப் பிடித்த 50 படங்களைத் தேர்வு செய்து அவற்றின் கதைச் சுருக்கம், அவை குறித்த சுவாரசியமான தகவல்கள் ஆகியவற்றை கிருஷ்ணன் வெங்கடாசலம் பகிர்ந்திருக்கிறார்.

சிவகவி, ஹரிதாஸ், மீரா, எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ராஜகுமாரி, தமிழின் தொடக்ககால பிரம்மாண்ட படமான சந்திரலேகா, அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, கலைஞர் மு.கருணாநிதி வசனகர்த்தாவாக அறிமுகமான மந்திரி குமாரி, பராசக்தி, மனோகரா, வீணை எஸ்.பாலசந்தரின் அந்த நாள், எம்.ஆர்.ராதவின் ரத்தக்கண்ணீர், ஸ்ரீதரின் கல்யாணபரிசு என அந்தக் காலகட்டத்தில் வெளியான பல முக்கியப் படங்கள் குறித்த செய்திகள் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களின் நினைவு வீணையை மீட்டியது போன்ற சுகம் தரத்தக்கவையாக உள்ளன.
வெறுமனே தன் அனுபவத்துடன் நின்றுவிடாமல் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரையும் குறிப்பிட்டிருக்கும் படத்தின் விவரக் குறிப்புகள் திரைப்படங்கள் குறித்து ஆய்வு செய்வோருக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

Leave a Comment