ஹாலிவுட் ஜன்னல்: காட்ஸில்லாவின் புதிய அவதாரம்!

ஹாலிவுட் ஜன்னல்: காட்ஸில்லாவின் புதிய அவதாரம்!

காட்ஸில்லா’ பட வரிசையில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’.

ஜப்பானியர் தங்களை அதிகம் பாதித்த பூகம்பம், அணுக்கதிர் வீச்சை மையமாகக் கொண்டு கார்ட்டூனில் ஏராளமான படைப்புகளை உருவாக்கினார்கள். அதில், ‘காட்ஸில்லா’ உள்ளிட்ட 17 ராட்சத மிருகங்களின் அதகளம் மிகுந்த கதைகள் பிரபலமானவை. பின்னர் அவை திரைப்படங்களாக வெளியாகி ஜப்பானுக்கு வெளியேயும் ரசிகர்களைச் சேர்த்தன.

வசூலில் ஏமாற்றாத ‘காட்ஸில்லா’வை ஜப்பான் உதவியுடன் படமாக்கிவந்த ஹாலிவுட், தற்போது அமெரிக்கத் தயாரிப்பாகவே எடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் 3-வது ‘காட்ஸில்லா’ திரைப்படமாகவும் ஒட்டுமொத்த ‘காட்ஸில்லா’ படவரிசையில் 35-வது படமாகவும் ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ உருவாகியுள்ளது.

இது 2014-ல் வெளியான ‘காட்ஸில்லா’ படத்தின் தொடர்ச்சி. ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ படத்தின் தொடர்ச்சியாக ‘காட்ஸில்லா’வும் ‘கிங்காங்’கும் மோதும் ‘காட் ஸில்லா Vs காங்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச்சில் வெளியாக உள்ளது.

ராட்சத விலங்குகளான மோத்ரா, ரோடன், மூன்று தலை கிங் கிடோரா மூலமாக மனித குலம் மற்றுமோர் அபாயத்தைச் சந்திக்கிறது. வழக்கம்போல ‘காட்ஸில்லா’ களமிறங்கி, அந்த மான்ஸ்டர்களை எதிர்த்துப் போராடுவதுதான் புதிய ‘காட்ஸில்லா’ திரைப்படம்.

அவர்களை உயிரியல் ஆய்வாளரான எம்மா அவருடைய முன்னாள் கணவர் மார்க் மற்றும் அவர்களின் பதின்ம வயது மகள் மேடிசன் ஆகியோர் ராட்சத விலங்குகளின் மோதலுக்குச் சாட்சியாகின்றனர். கிங் கிடோராவுடன் ‘காட்ஸில்லா’ மோதும் காட்சிகள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

கைல் சாண்ட்லர், வெரா ஃபார்மிகா, சாலி ஹாகின்ஸ், சார்லஸ் டான்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படத்தை மைக்கேல் டாகெட்ரி இயக்கியுள்ளார். ஆண்டின் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக 3டி மற்றும் ஐமேக்ஸ் பதிப்புகளில் புதிய ‘காட்ஸில்லா’ மே 31 அன்று வெளியாகிறது.

Leave a Comment