102 கிலோ எடை: 2 வருட போராட்டத்துக்குப் பின் எடையைக் குறைத்த சமீரா ரெட்டி

102 கிலோ எடை: 2 வருட போராட்டத்துக்குப் பின் எடையைக் குறைத்த சமீரா ரெட்டி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டி, 102 கிலோ எடையை எட்டி, 2 வருட போராட்டத்துக்குப் பின் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுள்ளார்.

தமிழில் சூர்யா, விஷால், மாதவன் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக உலாவந்த நடிகை சமீரா, திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் அவர் நடிக்கவில்லை. வேறு பொது நிகழ்ச்சிகளிலும் பெரிதாகக் காண இயலவில்லை. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவின் மூலம் இந்தக் கேள்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறார் சமீரா ரெட்டி.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

மே 2015-ல் நான் 102 கிலோ எடை இருந்தேன். அப்போதுதான் எனது மகன் பிறந்தான். எனது உடல் எடை பற்றி வெளிப்படையாகச் சொல்வதில், எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உண்மையில், நான் பருமனானபோது என்னை இருள் சூழந்ததுபோல் இருந்தது. எனது தன்னம்பிக்கை சிதைந்தது. ஓராண்டுக்குப் பின்னரும் கூட என்னால் அந்த எடையைக் குறைக்க இயலவில்லை. நானும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சினேன்.

இந்த உலகம் என்னைத் திரையில் கிளாமர் கேர்ளாகப் பார்த்தது. நான் இப்படி குண்டாக இருப்பதைப் பார்த்து என்ன சொல்லுமோ என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால், ஒருகட்டத்தில் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. நான் சிக்கியிருக்கும் இருளில் இருந்து வெளியே வந்தால்தான் எல்லாம் நடக்கும் என்பது புரிந்தது. இது கடினமானதுதான். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். அதன் பின்னரே எனக்கு இந்த உலகத்தை மீண்டும் பார்க்கும் துணிச்சல் கிட்டியது. என் எடையைக் குறைத்தேன். ஆனால், அதற்காக அர்த்தமற்ற டயட்டைப் பின்பற்றவில்லை. அர்ப்பணிப்போடு உடற்பயிற்சி செய்தேன். யோகா செய்தேன்.

இந்தத் தருணத்தில் நான் இப்படி ஒரு பதிவைப் பகிர்வதை முக்கியமானதாகக் கருதுகிறேன். காரணம், பெண்கள் போராட்டம்தான் உண்மையானது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள் என பல்வேறு உபாதைகளால் பெண்கள் உடல் பருமன் உபாதைக்கு ஆளாகின்றனர். மாற்றம் வேண்டுமானால் நீங்கள்தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். துணிச்சலாக இருங்கள். மனமிருந்தால் மலையைக் கூட அசைக்கலாம்.

இவ்வாறு சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.

Leave a Comment